February 27, 2010
A Walk to Remember (2002).....காதலின் நினைவில்
காதல் என்று பெயரில் எழுதப்படும் எந்த ஒரு வார்த்தையும் கவிதையாகிவிடும்..என்று எங்கோ படித்த நினைவில்...
நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? அந்த காதல் வெற்றியில் முடிந்திருந்தாலும்...... தோல்வில் மூழ்கியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது காதல் நம்மை தொட்டுபார்த்திருக்கும் , ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம்.
நம் நினனவில் அழிய சித்திரமான அந்த ஒருவர், இந்தக் தருணத்தில் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும்.
எதோ ஒரு இடத்தில் காதலர்களை பார்க்கும் போது, நமது காதலனோ அல்லது காதலியோ நம்மருகே இல்லாமல், ஒரு பெரும் தனிமையைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். . . காதலில் மூழ்கியிருந்த நாட்களை எண்ணி நமக்குள்ளே புன்னகைத்திருக்கிறோம்! அவர்களுடன் நாம் சிலகாலமே இருந்தாலும், நமது வாழ்க்கை முழுமைக்குமே அது போதும் என்ற ஒரு நிம்மதியை அளிக்கக்கூடியதே காதல்.
அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதையே இந்த "A WALK TO REMEMBER"..இந்தப் படம். அதே பெயரில் வந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர்கள் கொண்ட கூட்டம் தனித்தனியாக காரில் வந்து இறங்குகின்றது. அவர்கள் நண்பர் குழாமில் புதிதாக ஒருவன் சேர விரும்புகிறான். அவனுக்கு அதற்காக வைக்கப்பட்டிற்கும் ஒரு பந்தயம் – இருபதடி உயரத்திலிருந்து ஒரு குளத்தில் குதிப்பது. அவனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பொறுப்பற்ற அந்த கூட்டம். குதித்தவனுக்கு படுகாயம். காவல்துறையினரின் கார் சத்தம் அருகில் கேட்கிறது. அடிபட்டவனை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் காரில் பறக்கிறார்கள். ஒருவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான் – லேண்டன்.
லேண்டண் அம்மாவுடன் தனித்து வாழுகிறான். அவனுடைய அப்பா வேறு பெண்ணுடன் இருக்கிறார். அதனால் அவனுக்கு அவர் மேல் வெறுப்பு. அவரோ அவனிடமும் முந்நாள் மனைவியிடமும் நட்பாகவே இருக்க முயல்கிறார். லேண்டன் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பா இல்லாததால் தான் அவன் இத்தகைய காரியங்கள் செயதாக தாய் வருத்தப்படுகிறாள். காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவனுடைய பள்ளி அவனுக்கு சில பணிகளை விதித்திருக்கிறது. சேவை மையத்தில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல் மற்றும் உள்ளூர் நாடக குழுவின் நாடகத்தில் பங்குபெறுதல். வேண்டா வெறுப்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அவன் அந்த இடங்களுக்கு செல்கிறான்.
அந்த இடங்களுக்கு ஜேமியும் தவறாமல் வருகிறாள். அவளை ஏற்கனவே அவன் அறிந்திருக்கிறான். தேவாலய போதகரின் ஒரே மகள். சதா படித்துக்கொண்டேயிருப்பதற்காகவும், சேவை மையங்களில் நேரம் செலவழிப்பதற்காகவும், அவள் அணியும் அசுவாரஸ்யமான உடைகளுக்காவும் அவள் அந்த பள்ளியில் பிரபலமானவள். லேண்டன் விரும்பித்தான் சேவை செய்ய முன் வந்திருப்பதாக நினைத்து நட்பு பாராட்ட அவள் முயல, லேண்டன் அதை நிராகரிக்கிறான். அவனுடைய நண்பர் குழாம் அவளுடனான இவனுடைய நட்பை ஏற்காது. அது அவமானமாகவும் கேலியாகவும் கருதப்படும்.
ஆயினும், சேவை மையத்திலும் சரி, அவர்கள் காதலர்களாக நடிக்கும் அந்த நாடகத்தின் ஒத்திகையிலும் சரி, அவளின் உதவி இவனுக்கு தேவைப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவளுடைய நண்பனாகிறான். ஜேமி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள் – தன்னை காதலிக்கக் கூடாது என்று. லேண்டனுக்கு அடங்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது – இந்த பெண்ணை யார் காதலிப்பார்கள். நண்பர்கள் இல்லை – தோழிகள் இல்லை – ஆடைகளில் நல்ல தேர்வு இல்லை – அழகு தான் ஆனாலும் – லேண்டனின் கற்பனைக்கு எட்டாத ஒரு அதிசயம் மட்டுமே அவனை அவள் மேல் காதல் கொள்ள வைக்குமென நம்புகிறான்.
அந்த அதிசயமும் நிகழ்கிறது.
ஜேமி யாரும் அறியாத ஒரு புதையலைப் போல இருக்கிறாள். அமைதியான அழகு, அடக்கமான அறிவு், வயதை மீறிய தெளிவு – அத்தனையும் அவளிடம் கொட்டிக்கிடக்கிறது. மெல்ல மெல்ல அவளை காதலிக்கத் தொடங்குகிறான். இதை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவளை பள்ளியில் மிகவும் கேவலமான முறையில் கேலி செய்ய, அவர்களை எதிர்க்கிறான். ஜேமிக்கு ஆதரவாக நிற்கிறான்.
ஜேமி தன் வாழ்நாளில் தான் செய்ய வேண்டிய wish list ஒன்று வைத்திருக்கிறாள். முன் பின் தெரியாத ஒருவருக்கு காரில் லிஃப்ட் கொடுப்பதில் துவங்கி, ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருப்பது, ஒரு பேரதிசயத்தை காண்பது என வளரும் அந்த பட்டியலின் முதல் ஆசை் இறந்து போன அவளுடைய அம்மா திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது. இதை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குகிறான் லேண்டன். அவளை யாருடனும் வெளியே அனுப்ப மறுக்கும் அவனுடைய தந்தையுடன் வாதிட்டு அவளை வெளியே அழைத்துச்செல்கிறான். பள்ளி முடிகிற தருவாயில் காதலைச் சொல்கிறான்்.
தன்னுடைய நிபந்தனையை கண்ணீருடன் நினைவூட்டுகிறாள் ஜேமி. அவள் யாரையும் காதலிக்க முடியாது என மறுக்கிறாள். அவளுக்கு லுகீமியா. தன்னுடைய வாழ்நாளின் கடைசிகட்டத்தில் இருக்கிறாள் ஜேமி.
கண்ணீருடன் ஜேமி காட்டுத்தனமாக காரில் செல்கிறான். அவனுடைய அப்பாவிடமும்! அவர் ஒரு மருத்துவர். அவனுடைய அத்தனைக் கோபங்களும் உடைந்து அவரிடம் உதவி கேட்டு நிற்கிறான்!
வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கிறான். தொடர்ந்து அவளின் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருகிறான். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவளுடைய பெற்றோர் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளை மணமுடிக்கிறான்.
ஒரு வருடம் அழகிய ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டு இறந்து போகிறாள் ஜேமி.
பின்னர் ஒரு நாளில், லேண்டன் ஜேமியின் தந்தையை சந்திக்கிறான். அவளுடைய இரண்டாவது ஆசையாக ஒரு பேரதிசயத்தை காண விரும்பினாள். ஆனால் அது நடக்காமல் போனதாக வருந்துகிறான். அவனுடைய அப்பா மறுக்கிறார். ஜேமி நிச்சயம் ஒரு பேரதிசயத்தை கண்டாள். அது நீ என்று சொல்கிறார். மனதை நிறைக்கும் இசையுடன் நிறைவு பெறுகிறது படம்.
தெளிவான இதமான ஒரு காதல் கவிதை இந்தப் படம்.
லேண்டனாக வருகிற Shane west, ஜேமியாக வருகிற Mandy moore இருவரும் கச்சிதம். அழகான ஜோடி. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.
இருவரின் பெற்றோர் நம் மனதை நெகிழ வைக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகள் பேசுகிற சில காட்சிகள் அற்புதம். உடல்நிலை மோசமடைந்து ஜேமி மருத்துவமனையில் இருக்கும் போது அவளுடய அப்பா நினைவுகூறும் சிறு வயது ஞாபகங்களும், ஜேமிக்கு வீட்டிலிருந்தே மருத்துவம் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செலவையும் லேண்டனின் தந்தை மேற்கொண்டதை அறிந்து லேண்டன் அவரைத் தேடிச் சென்று அத்தனை வெறுப்பும் கோபமும் மறந்து கட்டியணைத்து அழுகிற காட்சி அழகு.
கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், இதமான பிண்ணனி இசையுமாக படத்தின் இரு தூண்களும் பலம்.
காதல் மெதுவாக மெதுவாக தலை காட்டத்துவங்கும் நாட்களின் உச்சமாக, லேண்டனும் ஜேமியும் காதலர்களாக அந்த மேடை நாடகத்தில் அரங்கேறுகிறார்கள். செம்மையான ஒப்பனையுடன், அற்புதமான உடையுடன் இந்தப் பெண் இத்தனை அழகா என்று நாமே வியக்கிற அந்த காட்சியில் அடக்கி வைத்த லேண்டனின் அத்தனைக் காதலும் வெடித்துச் சிதற படபடக்கிறது. காதல் வசனங்களும் அதை தொடரும் அற்புதமான மேடைப்பாடலுமாக லேண்டன் தவிக்கிற அந்த கணங்கள் படம் முடிந்தும் நம் நினைவில் இருக்கும்.
இதமான தரமான சுவையான காதல் படம் என்பதற்கு உறுதி....படம் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.
Subscribe to:
Posts (Atom)