அம்முவாகிய நான்--"தங்களைத் தேய்த்துக்கொண்டு பிறரை உயர்த்தும் கடைநிலை மனிதர்கள்"
ஒரு திரைப்படத்தின் கதைக்களன் தான் பார்வையாளர்களை அந்த திரைப்படத்துடன் ஐக்கியப்படுத்துகிறது. அம்மு என்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை திரைப்படமாக மொழிமாற்றும் முயற்சிதான் 'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் ஒன்லைன்.
படத்தில் வித்தியாசங்களை வலியத் திணிக்காமல் இயல்பான ஒரு திரைப்ப்டத்தைத் தந்திருக்கும் இயக்குனர் பாராடடப்பட வேண்டியவர்.
அம்மு குழந்தையாக இருக்கும்போதே பாலியல் தொழிலாளியான இராணியிடம் விற்கப்படுகிறாள். ராணி மடத்தில் பாலியல் தொழிலாளிகளிடையே வளரும் அம்மு தானும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை தன் நாவல்களின் மூலம் பதிவு செய்யும் எழுத்தாளர் கெளரிசங்கர் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை நாவலாக வடிக்கும் முயற்சியாக ராணி மடத்திற்கு வருகிறார். அங்கு அம்முவின்பால் ஈர்க்கப்படுகிறார். அம்முவை மணக்க விரும்புகிறார். முதலில் மறுக்கும் அம்மு பின்னர் தன் தோழிகளின் அறிவுரையின் பேரிலும் கெளரிசங்கரின் அன்பாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணம் முடிந்ததுமான அவர்களது வாழ்க்கை அழகான கவிதை.கெளரிசங்கரை வளர்த்த அக்காவாலும் அம்முவுக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாலும் சிறுசிறு பிரச்சனைகள் வருகின்றன.கெளரிசங்கர் தன் லட்சிய நாவலை முடித்து விருது தேர்வுக்கு அனுப்புகிறார். முன்பொரு முறை அம்முவினால் அவமானப்படுத்தப்பட்ட எழுத்தாளர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார். இலக்கிய விருது கிடைக்க வேண்டுமானால் மனைவியைத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என விருதுக் குழுத் தலைவர் சொல்ல, கணவனுக்குத் தெரியாமல் அவனிடம் போகும் அம்மு இறுதியில் அவன் தொடும்போது பொறுக்க இயலாமல் அவனைக் கொல்வதுதான் கதை (கொலையும் செய்வாள் பத்தினி!). கதாநாயகனுக்கு விருது கிடைக்கிறது.
படத்தின் பெரும்பலம் கச்சிதமான காட்சியமைப்பு. வில்லன் வரும் காட்சிகளைத் தவிர......இருந்தும் ஒவ்வொரு காட்சியமைப்பும் கதாநாயகன் பாலியல் தொழிலாளிக்கு வாழ்வு கொடுப்பதை உரக்கப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
"எங்கேயோ எப்படியோ பேர் தெரியாத நோயால் காணாமப் போயிருக்க வேண்டிய நான், இன்னிக்கு உன்னால இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டிருக்கேன்" எனக் கதாநாயகனிடம் அம்மு கூறுகிறாள்.
"ஹிஸ்டிரியில ஏதோ ஒரு எடத்துல நின்னுட்டீங்க சார்" என அம்முவை மணந்த கதாநாயகனிடம் அம்முவின் முன்னாள் கஸ்டமர் ஒருவர் சொல்கிறார். இவை கதாநாயகனைப் பாராட்டிப் பேசப்படும் வசனங்கள்.
கதைக்களனுக்கு ஏற்றவாறு வலுவான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படங்கள் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்று மிகச் சிறந்த திரைப்படங்களாக போற்றப்படுகின்றன. அதே நேரம் அடித்து ஆடவேண்டிய அட்டகாசமான கதைக்களனில் சொதப்பலான திரைக்கதையால் மொக்கையாகிப்போன படங்களும் உண்டு. அம்முவாகிய நான் இந்த இரண்டிற்கும் நடுவில்....
அம்முவாக நடித்திருக்கும் பாரதி அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். கண்கள் அப்படியொரு அழகு. அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம். பார்த்திபனுக்கு அவருக்கேற்ற கதாபாத்திரம்...
வழக்கமான மசாலா திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு சொல்லப்படாத கதைகளை படமாக்கும் 'அம்முவாகிய நான்' ஒரு படி மேலே தான்.
இந்த வாக்கியங்கள் எதோ ஒரு கட்டுரையில் படித்தவை.....
"ஆண் பாலியல் தொழிலாளர்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான விருப்பங்களில் எந்த வேறுபாடும் இல்லை."
மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்...