எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய் இருக்கிங்க.. மிக்க மகிழ்ச்சி...
1957-இல் வந்த இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் திரையிடப்படுகின்றது. இரண்டு மணி நேரம் ஒரே அறையில் 12 பேர் பேசிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியுமென்றால் இந்த படம் கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒன்று
ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 வயது இளைஞன். 12 ஜூரிகள். பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை. இதை வைத்து மிகச் சிறப்பாக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் 12 Angry Men.
ஒரு இளைஞன் தன் தந்தையைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறான். சாட்சிகளும் ஆதாரங்களும் அவனுக்கெதிராக இருக்கின்றன. அவன் தொலைத்ததாக சொல்லும் கத்தி கொலை நடந்த இடத்தில் கிடைக்கிறது. ஆனால் அவனோ குற்றத்தை மறுக்கிறான். வழக்கு முடிந்ததும் நீதிபதி 12 நடுவர்களை வழக்கு குறித்து முடிவெடுக்கச் சொல்கிறார். குற்றவாளியென நடுவர்கள் முடிவு செய்தால் அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி. நடுவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சாட்சிகள் அந்த இளைஞனுக்கு எதிராக இருப்பதால் பதினோரு நடுவர்களுமே அவன் குற்றவாளி என ஏகமனதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமிருப்பதாகவும் அவன் நிரபராதியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார். வழக்கு விசாரனையில் தனக்கு திருப்தியில்லை எனவும் அந்த இளைஞன் தவறுதலாக தண்டிக்கப்படக் கூடாதென்றும் கூறுகிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நடுவர்கள் வழக்கு குறித்து் தீர ஆராய வேண்டுமென்கிறார்.
மற்ற நடுவர்கள் விவாதிப்பது நேர விரயம் எனக் கூறி மறுக்கின்றனர். அந்த இளைஞன் கொலை செய்தது குறித்து தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர். அவரோ அந்த இளைஞன் சார்பான வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி அவற்றை முன் வைக்கிறார். விவாதத்தினிடையே நடுவர்களிடையே வாக்குவாதங்களும் சிறு மோதல்களும் நிகழ்கின்றன. வழக்கு குறித்து பேசப் பேச ஒவ்வொரு நடுவர்களாக மனதை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவன் குற்றவாளியென நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென அந்த இளைஞனை விடுதலை செய்ய முடிவெடுக்கின்றனர்.
இந்த எளிமையான கதையின் பலமே நடுவர்களாக வரும் 12 கதாபாத்திரங்கள்தான். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 12 கதாபாத்திரங்களும் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் பின்புலமும் இந்த வழக்கு குறித்த அவர்களது பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதை மிகச் சிறப்பாக படம்பிடித்திருப்பார்கள். வெற்றிகரமான தொழிலதிபர் முதல் வாழ்வில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஏழை வரை, இனவெறியாளன் முதல் மிகவும் கனிவான கதாபாத்திரம் வரை என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். வழக்கு குறித்த விவாதத்தினிடையே நடுவர்களுக்குள் தனிப்பட்ட மோதல்களும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடுவர்கள் குழுக்களாக சார்புநிலை எடுப்பதும் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
அதே போல் கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே வசனங்கள் அமைந்திருக்கும். அந்த இளைஞனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்களில் நம்மையே ஒரு சார்பை எடுக்க வைக்கும் அளவுக்கு வசனங்களும் காட்சியமைப்புகளும் கூர்மையாக இருக்கும். நடுவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.
.
வெகு நாட்கள் கழித்து..
மீண்டும் எழுத தொடங்க ஒரு புது உணர்வு.. பிழை இருந்தால் மன்னிக்கவும்.. நன்றி..