September 27, 2009

மெமண்டோவிலிருந்து.....கஜினிக்கு (எனது பயணம்)
எல்லோருக்கும் தெரிந்த செய்தியாக இருந்தாலும்....ஏனோ இப்டத்தை பற்றி எழுதனும் தோனுச்சு....என் மனசுல....

"மெமண்டோ” - கிறிஸ்டோபர் இயக்கத்தில், 2000-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான. இந்தப் படத்தினை தழுவி, முருகதாஸ் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் “கஜினி”.

நினைவுகள் மறப்பது என்ற பொதுவான அம்சம் இந்த இரண்டு படங்களிலும் இருந்தாலும், கதை சொல்லிய விதத்தில், இரண்டு படங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.


தலையில் பலமாக அடிபட்ட கதாநாயகனால், புதியதாக நினைவுகள் எதையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அந்த பதினைந்து நிமிடங்களில் நடந்த அனைத்தும் மறக்க, மீண்டும் புதிய நினைவுகளுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இந்த நிலையிலும், தனது மனைவியை கொன்றவனின் முகம் மட்டுமே நினைவினில் இருக்க, அவனை பழிவாங்கும் நோக்கத்தில் கதாநாயகன் போராடுவதுதான் இரண்டு படங்களின் கதை.

ஆனாலும், கதை சொன்ன விதத்தில் மெமண்டோ பல படிகள் கஜினியை விட மேலே நிற்கிறது. எப்போதும் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி இப்படி பார்த்த நமக்கு, கடைசி காட்சியில் ஆரம்பித்து முதல் காட்சியை நோக்கி கதையைக் கொண்டு செல்கிறது மெமண்டோ.
தவிர, ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் போது, தமிழுக்கு ஏற்ப கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பார் இயக்குனர் முருகதாஸ். இந்த மாற்றங்கள்தான் கஜினியின் வெற்றிக்குக் காரணமென நான் நினைக்கிறேன்.

•திரைக்கதை சொல்லும் பாணி-
ஒரு தமிழ் படத்தின் திரைக்கதை எவ்வாறு இருக்க வேண்டுமோ, அதன்படி கஜினியில் திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர். ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முற்றுப் புள்ளியை நோக்கி நகரும் வழக்கமான பாணிதான். மெமண்டோவைப் போல திரைக்கதையை இடியாப்பச் சிக்கல் ஆக்கியிருந்தால் படம் பப்படம் ஆகியிருக்கும்.

•சூர்யா-
அசின் காதல் காட்சிகள் - தமிழில் இது ஒரு குறிப்பிடத்தக்க அழகான மாற்றம். ஆங்கிலத்தில் காதல் காட்சிகளென்று எதுவும் கிடையாது. ஆனால் தமிழில் இரண்டு மூன்று டூயட்டுகள் இல்லையென்றால், படம் ஓடுவது கடினமாயிற்றே. அதனால் அசின் அறிமுகம். ஆனால் அந்தக் காட்சிகளும், "சுட்டும் விழி சுடரும்" படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

•வில்லன்-
தமிழ்க் கதாநாயகர்கள் அடித்து வீழ்த்த வில்லன்கள் தேவை (விஜய் போன்ற கதாநாயகர்களுக்கு குறைந்த பட்சம் 50 பேராவது தேவை!).கஜினியிலும், ஒன்றல்ல, இரண்டு வில்லன்கள். இப்பத்தின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. அதிலும் இறுதி சண்டைக் காட்சியில் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்பாக செய்திருந்தனர். ஆனால், மெமண்டோவில் சண்டைக்காட்சிகளே இருக்காது.

•மசாலாப் பாட்டு-
'சி' வகுப்பு ரசிகனையும் திருப்திப் படுத்த வேண்டுமே, அதற்காக நயன்தாராவும், அந்த ஒரு பாட்டும். இந்த மாதிரியான பாடல்களை வைக்க மட்டும் தமிழ் இயக்குனர்களுக்கு எப்படியாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
 
தமிழ்ப் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காலங்களிலும், பத்திரிக்கைகளில் 'தமிழ் மசாலாத்தனங்கள் நிறைந்த படம்' என்று வரும் போது, பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிந்ததில்லை. ஆனால், இப்போது மற்ற மொழிப் படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் 'தமிழ் மசாலா'வின் அர்த்தம் தெரிகிறது. :) இப்படி, தமிழ்ப் படங்களுக்க்காக, தன் சுயத்தை இழந்த நல்ல திரைக்கதைகள் ஏராளம்.
 
இவ்வாறு திரைக்கதையில் வித்தியாசம் காட்டிய மற்ற தமிழ் படங்கள் ஆய்த எழுத்தும், விருமாண்டியும் ஓரளவுக்கு வெற்றி பெற்றன.


MY Rating: 8 / 10 (Memento)

1 comment:

Kumaran said...

ரொம்ப நல்ல விமர்சனம்.மெமெண்டோ இயக்குனரான நோலன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்.இவருடைய திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்புதான் பார்த்தேன்.தொடரட்டும் உங்கள் கைவண்ணம்.நன்றி.வணக்கம்.