February 27, 2010

A Walk to Remember (2002).....காதலின் நினைவில்



காதல் என்று பெயரில் எழுதப்படும் எந்த ஒரு வார்த்தையும் கவிதையாகிவிடும்..என்று எங்கோ படித்த நினைவில்...

நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? அந்த காதல் வெற்றியில் முடிந்திருந்தாலும்...... தோல்வில் மூழ்கியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது காதல் நம்மை தொட்டுபார்த்திருக்கும் , ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம்.

நம் நினனவில் அழிய சித்திரமான அந்த ஒருவர், இந்தக் தருணத்தில் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும்.

எதோ ஒரு இடத்தில் காதலர்களை பார்க்கும் போது, நமது காதலனோ அல்லது காதலியோ நம்மருகே இல்லாமல், ஒரு பெரும் தனிமையைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். . . காதலில் மூழ்கியிருந்த நாட்களை எண்ணி நமக்குள்ளே புன்னகைத்திருக்கிறோம்! அவர்களுடன் நாம் சிலகாலமே இருந்தாலும், நமது வாழ்க்கை முழுமைக்குமே அது போதும் என்ற ஒரு நிம்மதியை அளிக்கக்கூடியதே காதல்.

அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதையே இந்த "A WALK TO REMEMBER"..இந்தப் படம். அதே பெயரில் வந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.


இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர்கள் கொண்ட கூட்டம் தனித்தனியாக காரில் வந்து இறங்குகின்றது. அவர்கள் நண்பர் குழாமில் புதிதாக ஒருவன் சேர விரும்புகிறான். அவனுக்கு அதற்காக வைக்கப்பட்டிற்கும் ஒரு பந்தயம் – இருபதடி உயரத்திலிருந்து ஒரு குளத்தில் குதிப்பது. அவனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பொறுப்பற்ற அந்த கூட்டம். குதித்தவனுக்கு படுகாயம். காவல்துறையினரின் கார் சத்தம் அருகில் கேட்கிறது. அடிபட்டவனை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் காரில் பறக்கிறார்கள். ஒருவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான் – லேண்டன்.

லேண்டண் அம்மாவுடன் தனித்து வாழுகிறான். அவனுடைய அப்பா வேறு பெண்ணுடன் இருக்கிறார். அதனால் அவனுக்கு அவர் மேல் வெறுப்பு. அவரோ அவனிடமும் முந்நாள் மனைவியிடமும் நட்பாகவே இருக்க முயல்கிறார். லேண்டன் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பா இல்லாததால் தான் அவன் இத்தகைய காரியங்கள் செயதாக தாய் வருத்தப்படுகிறாள். காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவனுடைய பள்ளி அவனுக்கு சில பணிகளை விதித்திருக்கிறது. சேவை மையத்தில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல் மற்றும் உள்ளூர் நாடக குழுவின் நாடகத்தில் பங்குபெறுதல். வேண்டா வெறுப்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அவன் அந்த இடங்களுக்கு செல்கிறான்.

அந்த இடங்களுக்கு ஜேமியும் தவறாமல் வருகிறாள். அவளை ஏற்கனவே அவன் அறிந்திருக்கிறான். தேவாலய போதகரின் ஒரே மகள். சதா படித்துக்கொண்டேயிருப்பதற்காகவும், சேவை மையங்களில் நேரம் செலவழிப்பதற்காகவும், அவள் அணியும் அசுவாரஸ்யமான உடைகளுக்காவும் அவள் அந்த பள்ளியில் பிரபலமானவள். லேண்டன் விரும்பித்தான் சேவை செய்ய முன் வந்திருப்பதாக நினைத்து நட்பு பாராட்ட அவள் முயல, லேண்டன் அதை நிராகரிக்கிறான். அவனுடைய நண்பர் குழாம் அவளுடனான இவனுடைய நட்பை ஏற்காது. அது அவமானமாகவும் கேலியாகவும் கருதப்படும்.

ஆயினும், சேவை மையத்திலும் சரி, அவர்கள் காதலர்களாக நடிக்கும் அந்த நாடகத்தின் ஒத்திகையிலும் சரி, அவளின் உதவி இவனுக்கு தேவைப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவளுடைய நண்பனாகிறான். ஜேமி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள் – தன்னை காதலிக்கக் கூடாது என்று. லேண்டனுக்கு அடங்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது – இந்த பெண்ணை யார் காதலிப்பார்கள். நண்பர்கள் இல்லை – தோழிகள் இல்லை – ஆடைகளில் நல்ல தேர்வு இல்லை – அழகு தான் ஆனாலும் – லேண்டனின் கற்பனைக்கு எட்டாத ஒரு அதிசயம் மட்டுமே அவனை அவள் மேல் காதல் கொள்ள வைக்குமென நம்புகிறான்.

அந்த அதிசயமும் நிகழ்கிறது.

ஜேமி யாரும் அறியாத ஒரு புதையலைப் போல இருக்கிறாள். அமைதியான அழகு, அடக்கமான அறிவு், வயதை மீறிய தெளிவு – அத்தனையும் அவளிடம் கொட்டிக்கிடக்கிறது. மெல்ல மெல்ல அவளை காதலிக்கத் தொடங்குகிறான். இதை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவளை பள்ளியில் மிகவும் கேவலமான முறையில் கேலி செய்ய, அவர்களை எதிர்க்கிறான். ஜேமிக்கு ஆதரவாக நிற்கிறான்.

ஜேமி தன் வாழ்நாளில் தான் செய்ய வேண்டிய wish list ஒன்று வைத்திருக்கிறாள். முன் பின் தெரியாத ஒருவருக்கு காரில் லிஃப்ட் கொடுப்பதில் துவங்கி, ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருப்பது, ஒரு பேரதிசயத்தை காண்பது என வளரும் அந்த பட்டியலின் முதல் ஆசை் இறந்து போன அவளுடைய அம்மா திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது. இதை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குகிறான் லேண்டன். அவளை யாருடனும் வெளியே அனுப்ப மறுக்கும் அவனுடைய தந்தையுடன் வாதிட்டு அவளை வெளியே அழைத்துச்செல்கிறான். பள்ளி முடிகிற தருவாயில் காதலைச் சொல்கிறான்்.

தன்னுடைய நிபந்தனையை கண்ணீருடன் நினைவூட்டுகிறாள் ஜேமி. அவள் யாரையும் காதலிக்க முடியாது என மறுக்கிறாள். அவளுக்கு லுகீமியா. தன்னுடைய வாழ்நாளின் கடைசிகட்டத்தில் இருக்கிறாள் ஜேமி.

கண்ணீருடன் ஜேமி காட்டுத்தனமாக காரில் செல்கிறான். அவனுடைய அப்பாவிடமும்! அவர் ஒரு மருத்துவர். அவனுடைய அத்தனைக் கோபங்களும் உடைந்து அவரிடம் உதவி கேட்டு நிற்கிறான்!

வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கிறான். தொடர்ந்து அவளின் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருகிறான். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவளுடைய பெற்றோர் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளை மணமுடிக்கிறான்.

ஒரு வருடம் அழகிய ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டு இறந்து போகிறாள் ஜேமி.

பின்னர் ஒரு நாளில், லேண்டன் ஜேமியின் தந்தையை சந்திக்கிறான். அவளுடைய இரண்டாவது ஆசையாக ஒரு பேரதிசயத்தை காண விரும்பினாள். ஆனால் அது நடக்காமல் போனதாக வருந்துகிறான். அவனுடைய அப்பா மறுக்கிறார். ஜேமி நிச்சயம் ஒரு பேரதிசயத்தை கண்டாள். அது நீ என்று சொல்கிறார். மனதை நிறைக்கும் இசையுடன் நிறைவு பெறுகிறது படம்.

தெளிவான இதமான ஒரு காதல் கவிதை இந்தப் படம்.


லேண்டனாக வருகிற Shane west, ஜேமியாக வருகிற Mandy moore இருவரும் கச்சிதம். அழகான ஜோடி. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.

இருவரின் பெற்றோர் நம் மனதை நெகிழ வைக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகள் பேசுகிற சில காட்சிகள் அற்புதம். உடல்நிலை மோசமடைந்து ஜேமி மருத்துவமனையில் இருக்கும் போது அவளுடய அப்பா நினைவுகூறும் சிறு வயது ஞாபகங்களும், ஜேமிக்கு வீட்டிலிருந்தே மருத்துவம் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செலவையும் லேண்டனின் தந்தை மேற்கொண்டதை அறிந்து லேண்டன் அவரைத் தேடிச் சென்று அத்தனை வெறுப்பும் கோபமும் மறந்து கட்டியணைத்து அழுகிற காட்சி அழகு.

கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், இதமான பிண்ணனி இசையுமாக படத்தின் இரு தூண்களும் பலம்.

காதல் மெதுவாக மெதுவாக தலை காட்டத்துவங்கும் நாட்களின் உச்சமாக, லேண்டனும் ஜேமியும் காதலர்களாக அந்த மேடை நாடகத்தில் அரங்கேறுகிறார்கள். செம்மையான ஒப்பனையுடன், அற்புதமான உடையுடன் இந்தப் பெண் இத்தனை அழகா என்று நாமே வியக்கிற அந்த காட்சியில் அடக்கி வைத்த லேண்டனின் அத்தனைக் காதலும் வெடித்துச் சிதற படபடக்கிறது. காதல் வசனங்களும் அதை தொடரும் அற்புதமான மேடைப்பாடலுமாக லேண்டன் தவிக்கிற அந்த கணங்கள் படம் முடிந்தும் நம் நினைவில் இருக்கும்.

இதமான தரமான சுவையான காதல் படம் என்பதற்கு உறுதி....படம் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

January 31, 2010

THE BUCKET LIST (2007) - எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.


வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.

கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.

எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.
மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.

January 20, 2010

முத்திரை- (2009)


திமிழில் இப்போழுதெல்லாம் சிறிய தயாரிப்புபடங்கள் எல்லாம் என்னை மிகவும் கவரபடுகின்றன..அப்படி என்னை கவர்ந்த படம் தான் இந்தப்படம்...எனக்கு தெரிந்து இங்கு இந்த படத்திற்க்கு பெரிய விளம்பரம் எதுவும் செய்யவில்லை..தற்செயல்லாக வலையில் எதையோ தேடும் போது கிடைத்து...

திருட்டு, கொலை, என்கவுண்‌ட்டர் என நெகடிவ் விஷயங்களை வைத்தே தனது முதல் படம் இயக்குனர் ஸ்ரீநாத். நிதின் சத்யாவின் காமெடியும், ராக்கி சாவந்த், லட்சுமிராயின் கவர்ச்சியும் படத்தின் எக்ஸ்ட்ரா போனஸ்.

லோக்கல் பர்ஸ் திருடன் நிதின் சத்யா. ஹைடெக் பாஸ்போர்ட் திருடன் டேனியல் பாலா‌ஜி. இவர்கள் இணைந்து காஸ்‌ட்லியாக கல்லாகட்ட நினைக்கும்போது வழியே போகும் ஒருவனால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு லேப்டாப்பால் வரும் அந்தப் பிரச்சனை நான் ஸ்டாப்பாக துரத்த, இருவரும் எப்படி அதிலிருந்து எஸ்ஸாகிறார்கள் என்பது கதை.

டேனியல் பாலா‌ஜிக்கு முதல் ஹீரோ அனுபவம். தெனாவட்டாக தி‌ரிகிறவர் லட்சுமிராயின் முன் ஈரத்துணி போர்த்திய கோழியாக பம்முவதும், அதற்கு காரணமான திருமண ப்ளாஷ்பேக்கும் இனிமையான அதிர்ச்சி. இந்த மூஞ்சியைப் பார்த்தா சிபிஐ ஆபிசர் போலவா இருக்கு என்று மஞ்ச‌ரியிடம் நிதின் சத்யாவை கலாய்க்கும் இடத்தில் டேனியலுக்கு காமெடி டைமிங் கைகூடி வந்திருக்கிறது.

கோவில் உண்டியலில் கைவைத்து ஊரா‌ரிடமிருந்து தப்பித்து ஓடிவரும் நிதின் சத்யா முதல் காட்சியிலேயே மனசுக்குள் ப்ரேம் போட்டு உட்கார்ந்து விடுகிறார். சிபிஐ ஆபிஸர் என்று அவர் விடும் அலப்பறைக்கு திரையரங்குக்குள் சி‌ரிப்பலை. மஞ்ச‌‌ரியை கவர அவர் விடும் காதல் மாஞ்சா செம ரவுசு.

நிதினுக்கு மஞ்ச‌ரி, டேனியலுக்கு லட்சுமிராய் என கோடு கிழித்த மாதி‌ரி இரண்டு ஹீரோயின்கள். பார் டான்சராக வரும் லட்சுமிராய் கவர்ச்சி, சென்டிமெண்ட் என இரண்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.

முதல்வரை கொலை செய்தவன் யார் என்ற த்‌ரில்லிங்கான சேஸிங் இருந்தும் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு. போலீஸ் கமிஷனராக வரும் கிஷோரின் திடீர் வில்லன் அவதாரம் அதிர்ச்சிக்குப் பதில் ஆயாசத்தையே தருகிறது.

என்கவுண்‌ட்ட‌ரில் பலியாகும் சேத்தன், முதலமைச்சர் அழகர் அதியமானாக வரும் சரவணன், அவரது தம்பி தொண்டை அதியமானாக வரும் ஆனந்த், பதவி ஆசை பிடித்த ஆதிகேசவனாக வரும் பொன்வண்ணன் என அனைவரும் தத்தமது பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸில் வரும் திடீர் திருப்பங்களில் உள்ளேன் ஐயா என ஆஜராகிறார் திரைக்கதையாசி‌ரியர் அனீஸ் தன்வீர். கொலையாளி யார் என்று யூகிக்க முடிவது படத்தின் மிகப் பெ‌ரிய பலவீனம். யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். சீரான இடைவெளியில் வரும் பாடல்கள் படத்தின் ஸ்பீடு பிரேக்கர்கள்.

அவ்வப்போது காணாமல் போகும் லா‌ஜிக்கை மன்னித்தால் முத்திரையை ரசிக்கலாம்.