August 9, 2009

Mumbai Meri Jaan. (வாழ்க்கையின் தருணங்களில் ஒரு பயணம்)


வலைபதிவில் பதிவு போட்டு ஒரு மாதத்துக்கு மேல ஆச்சு...எல்லோரும் என்னை முதல்ல மன்னிச்சுடுங்க...வேலை பளூ காரணத்தால் என்னால் படம் பார்க்க நேரமில்லை... இருந்தபோதும் என் பொட்டியில் படங்களை சேர்க்க தவறுவது இல்லை...அப்படி நான் சேர்த்த படங்களில் இருந்து நேற்று ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... படம் பார்த்து முடித்த பின் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த ஒரு............இன்னியும் உங்களை காக்க (அறுக்க) விரும்பல.... படம் 2008-ல் வெளிவந்த Mumbai Meri Jaan.


11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த் காமத் எவனோ ஒருவன்).




துக்காராம் பாட்டீல்(பரேஷ் ராவல்) ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள். தன் பணிக்காலத்தில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என ஒத்துக்கொள்ளும் ஒரு சராசரி காவலர். தன் நகைச்சுவையுணர்வின் மூலமும் கனிவான பேச்சின் மூலமும் சக காவலரிடமும் மக்களிடமும் அபிமானம் பெற்றவர். நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தன் மனதை தயார்படுத்திக் கொண்ட சாதாரண மனிதர்.

ரூபாலி(சோஹா அலி கான்) தொலைக்காட்சி நிருபர். எந்த செய்தியையும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளை தூண்டி வியாபாரமாக்கும் சராசரி செய்தி நிருபர். அவளின் காதலன் அவள் இவ்வாறு செய்வதைக் குறை சொல்லும்போது அதை நியாயப்படுத்தும் தன் பணியும் அதில் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இளம் நிருபர்.

இர்பான் கான் அந்தேரியில் சேரியில் வாழும் தமிழன். இரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவன். தன் ஏழ்மையின் காரணமாக பல தருணங்களில் பலரின் கேலிக்கும் இளக்காரத்துக்கும் ஆளானவன். பகட்டானதொரு அங்காடியில் தன் குடும்பத்தினர் முன் அவமானப் படுத்தப்படுகிறான்.

சுரேஷ்(கே.கே.மேனன்) சேல்ஸ்மேன். கடனாளி. இந்து அடிப்படைவாதி. முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன். வேலையற்ற நண்பர்களுடன் டீக்கடையில் பொழுதைக் கழிப்பவன். குண்டு வெடிப்பு நடந்த தினத்தன்று டீக்கடையில் ரகசியமாகப் பேசிக்கொண்ட மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது சந்தேகம் கொள்கிறான். இயல்பாகவே முஸ்லீம்கள் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணுகிறான்.

நிகில்(மாதவன்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். வெளிநாட்டு வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பையில் வேலை செய்யும் நடுத்தர வயது இளைஞன். சுற்றுப்புற தூய்மை பற்றி கவலை கொள்கிறான். தினமும் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் சென்று வருகிறான். ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கச் சொல்லி மற்றவர்களை அறிவுறுத்துகிறான்.

சுனில் கதம்(விஜய் மெளரியா) புதிதாக காவல்துறையில் சேர்ந்து துக்காராமுடன் பணிபுரியும் இளம் காவலர். சாதிக்கும் வெறியும் காவல்துறைக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட இளைஞர். ஆனால் மேலதிகாரிகளின் ஆணையால் பல சமயங்களில் கைகள் கட்டப்பட்டு அதனால் துறையின் மீது வெறுப்புடனும் சுயபச்சாதபத்துடனும் தவிப்பவர்.

ஜூலை 11, 2006 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் இந்த ஆறு பேரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் தாக்கம், அதிலிருந்து இவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.




தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்த நிகில் ரயில்களைக் கண்டு அச்சம் கொள்கிறான். பாதுகாப்பின்மையுணர்வால் தூக்கமின்றி தவிக்கிறான். பொது இடங்களில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகிக்கின்றான்.

இர்பான் குண்டுவெடிப்பினால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க எல்லோர் மனதிலும் உள்ள பயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். அங்காடிகளில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக போலிசுக்கு தகவல் சொல்லி அதில் மகிழ்ச்சியடைகிறான்.


ஏற்கனவே முஸ்லீம்களின் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் டீக்கடையில் தான் பார்த்த நபர்களே குண்டு வெடிப்புக்கு காரணமென முடிவு செய்து அவர்களைத் தேடி அலைகிறான். சாலையில் கடக்கும் வயதான முஸ்லீமையும் சந்தேகத்துடன் விசாரிக்கிறான். தன் வேலையையும் கடனையும் மறந்துவிட்டு வெறிகொண்டு அலைகிறான்.






ரூபாலியின் காதலன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கிறான். இதுநாள் வரை அடுத்தவரின் துயரை அறியாமல் அதை உணர்ச்சி நாடகமாக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ரூபாலிக்கு தான் செய்துவந்த செயல் உறைக்கின்றது. ஆனாலும் ரூபாலியின் தொலைக்காட்சி நிர்வாகிகள் அவளை வைத்தே நிகழ்ச்சி நடத்தி டி.ஆர்.பியைக் கூட்ட நினைக்கின்றனர்.






வெடிகுண்டு தாக்குதலினால் துக்காராமும் சுனிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திடமானவர்களை விசாரிக்கும்போது தாக்கப்படுகிறார்கள். போதை மருந்து உட்கொண்டவனைக் கைது செய்யும் போது உயரதிகாரிகளின் தலையீட்டால் பின்வாங்க நேருகிறது. சுனில் இதனால் ஆத்திரமும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று கழிவிரக்கம் கொள்கிறான்.

பணியினூடே சுனிலுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நிதர்சனத்தை உணர்த்துகிறார். இத்தனை வருட காவல்துறை சேவையில் தான் இதுவரை ஒருவரையும் சுட்டதில்லையென்றும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் செய்துவிடவில்லையென்றும் அதனால் தனக்கு வருத்தமும் இல்லையென்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து அறிவுரைகள் மூலம் சுனிலின் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் மட்டுப்படுத்துகிறார்.


இந்த ஆறு கதாபாத்திரங்களின் கதைகளும் தனித்தனியாக சொல்லப்படுகிறது. அவர்களை இணைக்கும் களமாக வெடிகுண்டு தாக்குதல். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சற்று நகைச்சுவையுடன் கூடிய காவலரான துக்காராமின் வசனங்கள். பெரும்பாலான காட்சிகள் துக்காரமை மையமாகக் கொண்டே நகர்கின்றன. தேவையற்ற பாடல் காட்சிகளோ நகைச்சுவைக் காட்சிகளோ திணிக்கப்படாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் கதையை மாற்றி மாற்றிச் சொன்னாலும் திரைக்கதை தொய்வில்லாமல் அமைந்திருக்கின்றது. கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Mumbai Meri Jaan - கதைக்களத்துக்காகவும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

June 23, 2009

Deck The Halls......100% பொழுது போக்கு



****IMDB RATING:4.4 /10****




கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் 2006 நவம்பர்-ல் வெளிவந்த நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் "Deck The Halls"

சரி வாங்க கதையின் ஒரு சின்ன அறிமுகம்......

Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போது தான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.

Hall ஒரு கார் விற்பனையாளார். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் அவனை பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். Hall தான் எதாவது சாகசம் செய்து புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதன் முயற்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வீட்டை விளக்குகளால் அலங்கரித்து வானில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.

ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என அடிக்கும் லுட்டிகள்...





என்னதான் இவர்கள் இருவரும் போட்டி பொறாமையுடன் இருந்தாலும்.... இவர்கள் குழந்தைகளும் மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.

ஆனால் Buddy , Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.
இறுதியில் Buddy & Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நேரத்தை கொள்ளை கொள்ளும்....அத்தனை பேரின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் பார்பவர்களுக்கு 100% பொழுது போக்கு.....

குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.


My Rating:6.5/10

June 17, 2009

பராசக்தி (1952).... (ஒரு மைல்கல்)



*****IMBD RATING:9.2/10*****

பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு.... அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று.

....

"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான். இது இவருக்கு முதல் படம் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது.

"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விகளை தொடுத்து நிற்கிறாள்.

சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது.

"இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது இன்றும் எவ்வளவு உண்மை.


படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான்...

ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.
அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள்.


அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்.

சுபம்...

இனி படத்தில் என் மனதை தொட்ட காட்சிகள்...

"ஓ ரசிக்கும் சீமானே பாடலும்",
"புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே" பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை......

படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள்.

ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார்.

அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை.

என்னை நானே கேட்கும் கேள்விகள்:-

குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?-

பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை....அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்-

"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"

"உங்களை சொல்லலைங்க.......
"முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.

"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"....... பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.

இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது.
என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்??????????.....
இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.
My Rating:8.5/10