"There's two kinds of people in
this world, there's winners and there's losers. Okay, you know what the
difference is? " Winners don't give up."
வெகுநாட்களாக இந்த திரைப்படத்தை பற்றி உங்களுடன் பரிர்ந்து கொள்ள ஆசை எதோ சில காரணங்கள்... மீண்டும் இந்த படத்தை நேற்று பார்த்த போது மீண்டும் பழைய நினைவுகள்.. என்னை பெரிதும் பாதித்த ஒரு திரைப்படம்.
தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைக்கதையின் காட்சியமைப்புகளும் முடிவும் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே அமைக்கபட்டிருக்கும்.இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.
அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன.
அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் இது.
முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
மேலாண்மை பேச்சாளராக ரிச்சர்ட் முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். .
. குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட மூத்த மகன் ட்வெயின். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன்
தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். .
ப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியர் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன்.
இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.
ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ரிச்சர்ட் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி.
ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.
எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை.
ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது.
பிடித்த காட்சிகளைப் நிறையவே இருக்கின்றது பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன்.சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.
போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா சொல்லும் இந்த வசனமே..............
"Losers are people who are so afraid of not winning, they don't even try."
தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன.
2 comments:
ரொம்ப நல்ல திரைப்படம்/பதிவு.இப்படத்தை பார்த்துவிட்டு என்றாவது ஒரு நாள் ஒரு பதிவு போட வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே காத்திருந்தேன்.தங்களது பதிவை படித்தபின் விரைவில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.தொடரட்டும் உங்களது கைவண்ணம்.மிக்க நன்றி...
இந்தப் படத்தை நான் பார்த்துட்டேன். ரொம்பப் புடிச்ச படம். அந்தக் குட்டி பொண்ணை மறக்கவே முடியாது.
Post a Comment