*****IMBD RATING:9.2/10*****பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு.... அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று.
....
"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான். இது இவருக்கு முதல் படம் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது.
"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விகளை தொடுத்து நிற்கிறாள்.
சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது.
"இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது இன்றும் எவ்வளவு உண்மை.
படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான்...
ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள்.
அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்.
சுபம்...
இனி படத்தில் என் மனதை தொட்ட காட்சிகள்...
"ஓ ரசிக்கும் சீமானே பாடலும்",
"புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே" பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை......
படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள்.
ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார்.
அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை.
என்னை நானே கேட்கும் கேள்விகள்:-
குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?-
பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை....அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்-
"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"
"உங்களை சொல்லலைங்க.......
"முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.
"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"....... பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.
இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது.
என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்??????????.....
இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.
My Rating:8.5/10
4 comments:
அஷ்வின்,
சில நாட்களாக ஊரில் இல்லை. இப்போதுதான் படித்தேன்.
உண்மையை சொல்வதானால் நான் இன்னமும் இந்த படத்தை பார்க்கவில்லை. அதைப் போலவே சிவாஜி அவர்கள் நடிப்பு பற்றியும் (அவரின் மற்ற படங்கள் பலவற்றை பார்த்த பிறகும்) ஒரு பெரிய அபிபபிராயம் இல்லை. அவர் நடிப்பு மிகைப் படுத்தப் பட்ட ஒன்றாகவே நான் கருதுகிறேன், இந்த கருத்து பலரை பாதிக்கும். இருந்தாலும் இது என் எண்ணம்.
ஆனால், இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது. நன்றி.
கிங் விஸ்வா.
Carpe Diem.
ஐம்பதாவது ஸ்பெஷல் காமிக்ஸ் பதிவு
அஷ்வின்,
//என்னை நானே கேட்கும் கேள்விகள்:-
குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?//
இதில் ஆட்சியாளர்களின் குறை இருந்தாலும் பெரும்பான்மையான தவறு மக்களிடம் தான். பிச்சை அளித்தலை கடுமையாக கண்டிப்பவன் நான். மக்களாக பார்த்து திருந்தாவிட்டால் எந்த அரசாங்கம் வந்தாலும் கூட இதனை மாற்ற இயலாது.
கிங் விஸ்வா.
Carpe Diem.
ஐம்பதாவது ஸ்பெஷல் காமிக்ஸ் பதிவு
அருமையான பதிவு.
நான் சமீபத்தில் பார்த்த பழைய படம் ரத்தக் கண்ணீர். அதனை பற்றி பின்னாளில் எழுதுங்கள்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
ஐம்பதாவது ஸ்பெஷல் காமிக்ஸ் பதிவு
@ King Viswa
மீண்டும் வந்தமைக்கு நன்றி....நான் அவர் நடிப்பை ஒரு மிகைபடுத்தபட்ட நடிப்பகவே கருதுகிறேன்...என்னும் அவர் நடித்த முதல் படத்திலே இப்படி ஒரு நடிப்பை வெளிபட செய்தாது தான். அது தான் நானும் சொல்ல வந்தேன்......இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, மெலொட்ரம என்று சொல்லலாம். மெலொட்ரம-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.
////இதில் ஆட்சியாளர்களின் குறை இருந்தாலும் பெரும்பான்மையான தவறு மக்களிடம் தான். பிச்சை அளித்தலை கடுமையாக கண்டிப்பவன் நான். மக்களாக பார்த்து திருந்தாவிட்டால் எந்த அரசாங்கம் வந்தாலும் கூட இதனை மாற்ற இயலாது.
முற்றிலும் சரி...நான் எதை நினைத்து எழுதினே...நீங்களூம் அதை சொல்லிவீட்டிர்கள்..
நிச்சியம் எழுதிகிறேன்,,,உங்களுக்கு பிடித்த இந்த படத்தை பற்றி.....
Post a Comment